W3C Web Resources



Monday, August 4, 2014

ஏறாவூரில் அரச ஊழியரான பெண்ணைக் கடத்திச் சென்று பேயோட்டும் சடங்குக்கு பயன்படுத்திய பிக்கு; கண்களை மறைத்து மரத்தில் கட்டியதாக முறைப்பாடு


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியரான குடும்பப் பெண்ணைக் கடத்தி, கண்ணைக் கட்டி பேயோட்டினார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பௌத்த பிக்கு ஒருவரையும் அவரது துணையாட்கள் மூவரையும் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 ஞாயிற்றுக்கிழமை மாலை பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள விகாரை ஒன்றிலிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பிக்குவையும் அவரது துணையாட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

 மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றும் குறித்த பெண்ணைக் கடத்தி வெலிக்கந்தையிலுள்ள விகாரைக் கொண்டு சென்ற பின்னர் அவரது கண்களைக் கட்டிய நிலையில் அவரை மரத்தில் கட்டி வைத்து பேயோட்டினர் என்று சம்பந்தப்பட்ட பெண் தனது  முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

 சனிக்கிழமை கடத்திச் செல்லப்பட்ட பெண், பின்னர் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு வரப்பட்டு வாழைச்சேனையில் இறக்கிவிடப்பட்டுள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணே நேரடியாக ஏறாவூர் பொலிஸ் நிலையம் வந்து தனக்கு நடந்த கதி பற்றி முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment