இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 17 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகின்றது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் கூல் அண்ட் கூல் கிண்ணத்திற்காக நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந் நாட்டு மண்ணில்
முதல் தடவையாக வெற்றிகொண்ட (1 - 0) பின்னர் கடந்த மாதம் தென் ஆபிரிக்காவுடனான தொடரை
சீரற்ற கால நிலையால் 1 - 1 என சமப்படுத்தத் தவறிய இலங்கை அணி, பாகிஸ்தானுடான டெஸ்ட்
தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றது.
அதேவெளை, தென் ஆபிரிக்கா (அக். 2013), இலங்கை (டிச. 2013 - ஜன. 2014) ஆகிய நாடுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடர்களை நடுநிலையான ஐக்கிய அரபு இராச்சிய மைதானங்களில் 1 க்கு 1 என சமப்படுத்திக்கொண்ட பாகிஸ்தான் சுமார் 8 மாதங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் 1982 முதல் 2014 வரை 16 டெஸ்ட் கிரிக்கட் தொடர்களில் 46 போட்டிகளில் சந்தித்துள்ளன. அவற்றில் 17இல் பாகிஸ்தானும் 11இல் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன. 18 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
இந்த இரண்டு அணிகளையும் பொறுத்தமட்டில் பாகிஸ்தானிலும் பார்க்க அனுபவம் வாய்ந்த வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவசாலியான மஹேல ஜயவர்தன 34 சதங்கள், 48 அரைச் சதங்களுடன் 11,671 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். 126 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார 36 சதங்கள், 50 அரைச் சதங்களுடன் மஹேலவை விட 6 ஓட்டங்கள் குறைவாக 11,665 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 42 போட்டிகளில் 4 சதங்கள், 17 அரைச் சதங்களுடன் 2856 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இந்த வருடத்தில் மாத்திரம் குமார் சங்கக்கார 1163 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 1003 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 860 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 728 ஓட்டங்களையும் பெற்று தத்தமது துடுப்பாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் அனைவருமே இவ் வருடம் இதுவரை தலா 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக அறிவித்துள்ள மஹேல ஜயவர்தன இந்தத் தொடர் முடிவில் கௌரவத்தோடு விடைபெறும் வகையில் தனது துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்துவார் என எதிர்பாரக்கப்படுகின்றது.
பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 55 டெஸ்ட் போட்டிகளில் 237 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளதுடன் இவ் வருடம் 8 போட்டிகளில் 37 விக்கெட்களைக் கைப்பற்றி இவ் வருடம் அதிக விக்கட்களைக் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் இன்றைய போட்டியில் பிரதான சுழல் பந்துவீச்சாளராக இடம்பெறவுள்ளார்.பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் நான்கு அனுபசாலிகளே இடம்பெறுகின்றனர். யூனிஸ் கான், அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக், சயீத் அஜ்மால், அஸ்ஹர் அலி ஆகியோரே அந்த நால்வராவர். யூனிஸ் கான் 89 டெஸ்ட் போட்டிகளில் 23 சதங்கள், 28 அரைச் சதங்களுடன் 7,399 ஓட்டங்களையும் மிஸ்பா உல் ஹக் 46 போட்டிகளில் 5 சதங்கள், 25 அரைச் சதங்களுடன் 3218 ஓட்டங்களையும் அஸ்ஹர் அலி 32 போட்டிகளில் 5 சதங்கள், 15 அரைச் சதங்களுடன் 2192 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.பந்துவீச்சில் சயீத் அஜ்மால் 33 போட்டிகளில் 169 விக்கட்களையும் அப்துர் ரஹ்மான் 20 போட்டிகளில் 95 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.



No comments:
Post a Comment